Showing posts with label recipes in Tamil. Show all posts
Showing posts with label recipes in Tamil. Show all posts

Wednesday, October 24, 2018

சுசியம்

என் சிறு வயது நினைவுகளில் மிக பசுமையான இடம் சுசியத்திற்கு உண்டு.  பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் இருக்கும் ஒரு கடையில் இந்த வடையை சுட சுடப் போட்டுக் கொண்டு இருப்பார்கள். வாசனை சுண்டி இழுக்கும். தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றால் கண்டிப்பாக அப்பா இந்த வடையை வாங்கிக் கொடுப்பார்.

வெளியே மொறு மொறு வென்றும், உள்ளே  அதற்கு நேர்மாறாக  மென்மையாக இனிக்கும் இந்த வடை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.

இந்த வடையை செய்வது மிக எளிமையானதே. உணவு பல நினைவுகளை தூண்டி விடும் என்பது எவ்வளவு உண்மை!  வாருங்கள், செய்முறையைப் பார்ப்போம்.

Click here for the Susiyam recipe in English



தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு:

பச்சரிசி                   - 3/4 கப்
உளுத்தம் பருப்பு  - 3/4 கப்
உப்பு                          - தேவையான அளவு

பூரணத்திற்கு:

கடலைப்பருப்பு      - 1 கப்
வெல்லம்                  - 1 கப்
ஏலக்காய்                  - 4 அல்லது 5
நெய்                           - 1 தேக்கரண்டி

எண்ணெய்               - தேவையான அளவு


செய்முறையை கீழ் காணும் லிங்கில் காணலாம்.


ஆயத்த வேலைகள்:


அரிசியையும், உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற விடவும்.

ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும் அல்லது ஏலக்காய் பொடி 1/4 தேக்கரண்டி பயன்படுத்தலாம்.

வெல்லம் தட்டி வைக்கவும்.

செய்முறை:


ஊற வைத்த அரிசியையும், உளுத்தம் பருப்பையும் நன்றாக மைய , தண்ணீர் குறைவாக தெளித்து கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் பூரணத்தின் மீது மேல் மாவு நன்றாக ஒட்டாது. மாவில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பை வேக வைத்து எடுக்கவும்.  தட்டி வைத்த வெல்லத்தில் 3 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். வெல்லத்தில் இருக்கும் கசடுகளை நீக்கவே இவ்வாறு செய்கிறோம்.

வேக வைத்த கடலைப்பருப்பையும், வடிகட்டிய வெல்லத்தையும் அடி கனமான பாத்திரத்தில், மிதமான தீயில் கொதிக்க விடவும். இடை இடையே மசித்து விடவும். பொடித்த ஏலக்காய் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க சிறிதளவு நெய் சேர்க்கலாம்.

நன்றாக தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும். பூரணம் ஆறியதும் நன்றாக இறுகி விடும். சின்ன சின்ன உருண்டைகளாக பூரணத்தை பிடிக்கவும்.

பிடித்து வைத்த உருண்டைகளை மேல் மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுசியம் தயார். இந்த அளவில் சுமார் 25 சிறிய சிசியம் கிடைக்கும்.


மேல் மாவு மீதம் இருந்தால் சிறுது கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, உப்பு சேர்த்து கார வடையாக செய்யலாம்.